நான் கடவுள்
>> 17 February 2009
எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறிவா ரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கின்
கண்ணாடி போலகலந்து நின்றானே.
இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு
தமிழ் சினிமாவுலகை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றார் இயக்குனர் பாலா. இப்படம் தமிழின் வெளிவந்த சிறந்த படங்களின் வரிசையில் வைத்து எண்ணத் தக்கது.பல்வேறு விருதுகளுக்குத் தகுதியுடைய படம்.
திரைப்படம் என்றால் கதாநாயகன்,நாயகியைச் சுற்றியே அமைய வேண்டும் என்ற மரபினைப் பாலா கட்டுடைத்து,அப்படத்தில் வரக் கூடிய ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழச்செய்துள்ளார்
வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளையும் திரைக்கதைக்குள் கொண்டு வந்து அழகான நாவல் படிப்பது போன்ற உணர்வினையும் தோற்றிவித்து, ஆழமாக காட்சிப்படுத்தி முடியும் என்பதை உண்மையாக்கியுள்ளார் இயக்குனர் பாலா
விளிம்பு நிலை மாந்தர்களின் மீது இயல்பாக ஏற்படக் கூடிய இரக்க உணர்வினை மட்டுமில்லாமல், அவர்களைப் பார்த்து சிரிக்கவும்,அழுகவும், நெகிழ்வும் செய்துள்ளார் பாலா.பிச்சையை இறை தோற்றத்தில் எடுக்க வைப்பதும் அப் பாத்திரங்களின் வழி சமுதாய இழிவுகளைச் சாடுகின்றார்.
காசி நகரினை இன்னும் காட்சிபடுத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
ஜெயமோகனின்
கருத்தரங்க அறிவிப்பு மடல்
>> 16 February 2009
நாகை அ.ம.து.மகளிர் கல்லூரியுடன் இணைந்து-திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் நடத்தும் ஏழாவது அனைத்துலக வரலாற்றுத் தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.இக்கருத்தரங்கிற்கு தமிழ்மொழி வரலாறு,தமிழின வரலாறு,தமிழ் மன்னர் வரலாறு,தமிழர் பண்பாட்டு வரலாறு,தமிழ் இலக்கிய வரலாறு,தமிழ் இலக்கண வரலாறு,தமிழர் சமய வரலாறு,தமிழர் அறிவியல் வரலாறு,தமிழ் கவிஞர்-எழுத்தாளர் வரலாறு,திழ் அறிஞர்கள்-நினைவுச்சின்னங்கள் வரலாறு என்ற மையப் பொருண்மையில் அமைந்த கட்டுரைகளை எழுதலாம்.சிறந்த 50 கட்டுகளைத் தேர்ந்தெடுத்து கட்டுரையாளர்களுக்கு செந்தமிழ்ச் சுடர் என்ற பட்டம் வழங்கப் பெறுகின்றது.சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து 1000ரூபாயும் செந்தமிழ் வேந்தர் பட்டமும் வழங்கப்பெறுகிறது.
பதிவுக்கட்டணம்---ஆய்வு மாணவர்களுக்கு 500
மற்றவர்களுக்கு-550
காசோலை எடுக்க வேண்டிய முகவரி
கண்ணகி கலைவேந்தன் என்ற பெயரில் பாரத வங்கி,இந்தியன் வங்கி,லெட்சுமி வங்கி,கார்பரேசன் வங்கி,கூட்டுரவு வங்கி ஆகிய வங்கிகளில் எடுத்து அனுப்பலாம்.பணவிடையாகவும் எடுத்து அனுப்பலாம்.
கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி
முனைவர் மு.கலைவேந்தன்
தலைவர் தமிழய்யா கல்விக் கழகம்
ஔவைக்கோட்டம்
திருவையாறு-613204
கைபேசி---9486742503
புறநானூற்றில் கல்விச்சிந்தனை
>> 14 February 2009
மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன்.
இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது.
காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள மொழிப்பயன்பாடு அவர்களுக்கு இன்றியமையாதாயிற்று.
இயற்கையை எதிர்த்து வாழவேண்டிய மனிதனுக்கு கூரிய அறிவும் சீரிய உணர்வும் மிகுந்து தேவையாயிற்று.எனவே அவன் தனக்கு வேண்டிய அறிவை இயற்கையிடமிருந்தே கற்றான்.எனவே மாந்தனின் முதல் ஆசிரியர் இயற்கையே.
மன்றங்கள்-பள்ளிகள்
சங்க காலத்தில் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் என்னும் பெயரில் எந்த இலக்கியத்திலும் குறிக்கப் பெறவில்லை.அதற்கு இணையாக மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்தன
என்பதை
அன்னாய் யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றம் தென்னன் ,செம்மலன்(குறுந்,33-1,2)
என்று கூறுமிடத்து மாணவர்கள் மன்றத்திடை இருந்து கல்வி பயின்றதனைக் குறிப்பால் அறியலாம்.
சங்ககாலத்தில் ஊர்ப் பொது மன்றங்களில் தான் அனைத்தும் நடைப்பெற்றன.பொது மன்றங்களில் பலா,வேம்பு முதலிய மரங்களின் நிழலில் பாணர்,பொருநர் முதலிய இரவலர்கள் வந்து தங்குதலும்,அங்குள்ள மரங்களில் தம் இசைக் கருவிகளைத் தொங்க விடுதலும் மரபாகும்.இச்
செய்தியின்
மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றுய வசிகூடு முழவின்(புறம்,128-1,2)
மன்றப் பலவின் மால்வரை பொருந்தியென் (புறம்,374-15)
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர் (புறம்,76;4)
மன்ற வேம்பின் ஒண்குழை மலைத்து (புறம்,79;2)
மன்ற வேம்பின் ஒண்பூ வுறைப்ப (புறம்,371;7)
என்னும் புறநானூற்று அடிகள் மூலம் அறியலாம் இங்ஙனம் ஊர்ப்பொது மன்றங்களில் பலர் கூடி வாதிடவும் கல்வி கற்கவும் பயன்படுத்தப் பெற்றிருந்தது என்பதை ஊகிக்க முடிகின்றது.
சங்க காலப் புலவர்கள் பலர் ஆசிரியர்களாக விளங்கியுள்ளனர் என்பதை ஆசிரியன் பெருங் கண்ணன்,குலபதி நக்கண்ணனார்,மதுரை ஆசிரியர் கோடங்கொன்றனார்,மதுரை இளம் பாலாசிரியன் முதலிய பெயர்களைக் கொண்டே அறியலாம்.புறநானுற்றில் அடைநெடுங்கல்வி யார் என்னும் புலவர் ஒருவர் பெயர் காணப்பெறுகிறது.இப்பெயர் கல்வியால் பெற்ற சிறப்புப் பெயராகும்.
ஊதியமில்லாக் கல்வி உருப்படாது என்பது பழமொழி இலவசக் கல்வி நடைபெறும் இந்நாள் போலில்லாது அந்நாளில் ஆசிரியருக்குப் பெரும் பொருள் கொடுத்தும்,வேண்டிய உதவிகளைச் செய்தும் அவர் சினங்கொள்ளாத வகையில் இரு உன இருந்து,சொல்லெனச் சொல்லி அடக்கத்துடன் கல்வி கற்றனர் என்பதை,
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறம்,183;1,2)
என்ற புறநானூற்றுப் பாடல் வழி அறியமுடிகின்றது.
கற்றோருக்கு எங்கும் சிறப்பு
கற்றவருக்கு தம் நாடும் ஊருமேயன்றி அனைத்து நாடுகளும்,ஊர்களும் சொந்தமாகும்.அதனால் ஒருவன் இறக்கும் வரையில் கல்லாமல் வீண்காலம் கழிக்கக் கூடாது என்பர்
வள்ளுவர்
யாதானும் நாடாமல் ஊராமல் எனொருவன்
சாந்துனையும் கல்லாத வாறு (குறள்,397)
கற்வருக்கு,
யாதுமூரே யாவரும் கேளிர்(புறம்,192;1)
என விளக்குவர் கணியன் பூங்குன்றனார்.
மரங்கொன்ஃ றச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே (புறம்,192,1)
என்பர் ஔவையார்.
ஆற்றவுங் கற்றார் அறிவுடையார்(பழமொழி நானூறு,4)
என்று பழமொழிநானூறும் கல்வியின் பெருமையைக் கூறும்.
பெற்றோர் பெருமை
குழந்தைகளைப் பெற்றெடுத்த அன்னை தான் பெற்ற பிள்ளைகள் அனைவரிடமும் பாசமிக்கவர்கள்தான்.இதனாலன்றோ தாயன்பு தலைசிறந்த அன்பாக மதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பாசம் மிக்க தாயும் கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கும் மகனையே பெரிதும் விரும்புவாள்.இதனை
பிறப்போரன்ன வுடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலாற் தாயுதனந் திரியும் (புறம்,183;3,4)
என்று புறநானூற்றில் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றின் வழி அறியலாம்.
ஈன்ற பொழிதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள்,69)
என்ற திருவள்ளுவர் வாக்கும் இக்கூற்றையே அணி செய்கிறது.
பெற்றோரைப் பெருமைப்படுத்தும் நிலை கல்விக்குண்டு. எனவே பிச்சை எடுக்கும் இழிநிலையிலுங் கூட ஒருவன் கற்க வேண்டும் என்கிறார்.அதிவீரராம்பாண்டியர்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை,15)
கொடுக்கக் குறையாத செல்வம்
பொருட் செல்வம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்.ஆனால் கல்விச் செல்வத்தை வெள்ளம் அழிக்க இயலாதது; நெருப்பினால் வேகாதது;எடுத்துக் கொடுத்தாலும் குறையாது;திருடர்களால் களவாட முடியாது;மம்மர் அறுக்கும் மருந்தாகவும் சிறப்புடையது கல்வி.என்பது விவேக சிந்தாமணி தரும் செய்தி
கல்வியின் சிறப்பு சொல்ல சொல்ல விரியும்,கற்றவரே கண்ணுடையார் என்றும் கல்லாதவர் முகத்தில் புண்ணுடையார் என்றும்,கல்வியைக் கண்ணைப் போல கருதுதல் வேண்டும் என்றும் கற்றவரே தெய்வம் என்றும் இலக்கியங்கள் பலபடப் பாராட்டுகின்றன.
ஒரு நாட்டின் வளம் நிலவளத்தால் மட்டும் அமைவதன்று,கற்றறிந்த சான்றோராலேயே நாடு மதிக்கப்பெறுகின்றது.இதனை,
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)
என்ற ஔவையார் வாக்கு வலியுறுத்துகின்றது.
கல்லார் இழிவு
கற்றார் பெருமை அறியக் கல்லார் இழிவும் அறிதல் வேண்டும்.
தமிழ் மக்கள் கற்றாரைப் பெருமைப்படுத்தியுள்ளதுடன் கல்லாதவரை இகழ்ந்து ஒதுக்கியுமுள்ளனர்.
நூல்கள் பல கற்றாரை மாந்தர்களாகவும் கல்லாதவரை விலங்குகளாகவும் கருதுவர் வள்ளுவர்.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றா ரோடேனை யவர் (குறள், 410)
இவரினும் ஒருபடி மேலே சென்று,
வித்தையில்லா மக்கள் விலங்கினும் கடையராவர்
புத்தியில்லத மாந்தர் புல்லினும் புல்லராவர்
என்பர் கா.நமச்சிவாய முதலியார்.
கல்வி அறிவில்லார் மாடுகள் மேய்க்கின்ற புல்லைவிடப் புல்லராவர் என்பர் விளம்பிநாகனார்.
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
என்று அறிவுறுத்துவர் திருமூலர்.
துன்பமுற்றாலும் அறிவிலார் செல்வத்தை நினையாது நல்லறிவி னையுடையாரது வறுமையைப் பெரிதாக நினைப்போம் என்கிறார் எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
மிகப் பெரெவ்வ முறினு மெனைத்தும்
உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம்
நல்லறிவுடை யோர் நல்குர
வுள்ளதும் பெருமயா முவந்து நனிபெரிதே (புறம்,197;15-18)
கேள்வியால் வரும் நன்மை
ஒருவன் சிறிதளவாயினும் கற்றவரிடமிருந்து கேட்க வேண்டும்.அக்கேள்வி அறிவு நிறைந்த பெருமையைத் தரும் என்பது வள்ளுவர் கருத்து.
பால் புளிப்பினும் பகல் இருளினும்
நால் வேதநெறி திரியினும்
திரியாச் சுற்றம் (புறம்,2;17-19)
என முரஞ்சியூர் முடிநாகனார் இக்கருத்துக்கு வலிமை சேர்க்கின்றார்.
சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் வாழ்த்துகிறார்.பால் தன் இனிமை ஒழிந்து புளிப்பினும்,ஞாயிறு இருளினும் நான்கு வேதத்தின் ஒழுக்கம் வேறுபடினும் சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு நடுக்கமின்றி நிற்பாயாக என வாழ்த்துகின்றார்.அமைச்சு சுற்றம் என்பதால் அவர்கள் கேள்விச் செல்வம் இன்றியமையாதது நன்மை பயக்கும் என்பதாம்.
கேள்வியின் வகைப்பாடு
பரஞ்சோதி முனிவர் கேள்விகளை நான்கு வகைப்படுத்துகின்றார் அதை,
நன்றும் தீதுணர் நால்வகைக் கேள்வியர் (திருவிளையாடற் புராணம்)
கேள்வியானது மாசறு கேள்வி,வயங்கு கேள்வி,உணர்ந்த கேள்வி,அற்றமில் கேள்வி,அறமலி கேள்வி ,ஓங்கிய கேள்வி,வெறுத்த கேள்வி எனப் பல்வேறு அடைமொழி பெற்றுள்ளது.
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடை கழிந்து (சிலம்பு,மதுரைக்காண்டம் 13-34,35)
என இளங்கோவடிகள் மாசறு கேள்வியினை எடுத்துக் காட்டுகின்றார்.அறந்தலைப் படுதற்கும்,அழுக்காறு அவா,வெகுளி,இன்னாச்சொல் எனும் நான்கினையும் நீக்கி மனமாசு அறுதற்கும் காரணமாக இருந்து நூற் கேள்வி என்பதும் அறியமுடிகிறது.
நல்ல பல நூல்கள்க் கேட்டு அறிவு நிரம்பிய ஒருவனை
........நன்பல
கேள்வியால் முற்றிய வேள்வியந்தணர்.(புறம்,361;3,4 )
எனப் புறநானூறு காட்டும்.
செந்நாப் புலவராகிய கபிலர் செறிவுமிக்க கேள்வியும்,விளங்கிய புகழும் மிக்கவர் என்பதை,
செறுத்த செய்யுட்செய் செந்நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் (புறம்,53;11,12)
எனப் பொருந்தில் இளங்கீரனார் குறிப்பிடுகின்றார்.
கல்வியின் பயன்
கல்வியின் பயன்களை இலக்கியங்கள் தெளிவாகச் சுட்டுகின்றன.சங்ககாலத்திற்குப் பின்னர் கல்வி என்பது சமயக் கல்வியாகத் தான் இருந்துள்ளது.சமயக் கல்வி சமய ஒழுங்கு முறைப்படி செயலாற்றுதலையும்,நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தியது.
சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்றி நல்வழிப்படுத்தலே கல்வியின் தலையாய பயனாகும்.பிறர் நலம் நாடும் பண்பினைக் கற்றலினாய பயன்களுள் ஒன்றாகக் குறிப்பிடலாம்.
கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை உண்டால் அம்ம இவ்வுலகம் (புறம்,182) என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கற்றோர் இந்திரர் அமிழ்தம் கிடைப்பதாயினும் தனித்து உண்ணார்;பிறருக்குக் கொடுத்தே உண்பார்.யாரிடமும் சினம் கொண்டு ஒதுங்க மாட்டார்.பிறர் துன்பங்களைக் கண்டு தாங்களும் அஞ்சுவர்;புகழுக்காக உயிரையும் கொடுப்பர்;பழிவருமெனில் உலகமே கிடைப்பதாயினும் கொள்ளார்.தனக்கென வாழாமல் பிறர்கென வாழ்வார் என்று விளக்குகிறது.
சாதிக் கொடுமை அகல,கல்வி ஒன்றே உயர்ந்த கருவி என்பதை,
கீழ்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவன் அவன்கட் படுமே ( புறம், 183)
என்ற புறநானூற்றுத் தொடர் நன்கு வலியுறுத்துகின்றது.
சங்க காலத்தில் சங்கப் புலவர்கள் பலர் ஆசிரியர்களாகத் திகழ்ந்துள்ளனர். சமுதாயத்தில் ஆசிரியர்கள் மிகவும் மதிக்கப் பெற்றனர்.உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் மாணவர்கள் கல்வி கற்றனர்.
மாணாக்கர் முதல் கடை இடையென மூவகையினர்.
கற்றோர் எங்கும் சிறப்புப் பெற்றனர்.கல்வி எழுமைக்கும் ஏமாப்பாயிற்று, பிள்ளைகளின் கல்வியறிவு பெற்றோரைப் பெருமைப்படுத்தியது.
மம்மர் அறுக்கும் மருந்தாகிய கல்வி கொடுக்கக் கொடுக்கக் குறையாது.
கல்லார் இழிவுடையோராகக் கருதப்பட்டனர்.கல்வியைப் போல கேள்விக் கல்வியும் சிறந்தது.விரைந்து கற்க அது பயன்பட்டது.
கற்றதன் பயன் மனிதத் தன்மையுடன் வாழ்வதே,சாதிக் கொடுமைகள் அகல,கல்வி ஒன்றே உயர்ந்த கருவி.
கருத்தரங்கம்
>> 10 February 2009
கணிணி மற்றும் இணையத்தமிழ் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் 27,28.02.2009ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பதிவுக்கட்டணம் ஆய்வாளர்க்ளுக்கு 100 விரிவுரையாளார்களுக்கு 200.ஆகும்.கட்டுரை16.02.2009தேதிக்குள் அனுப்ப வேண்டும். முனைவர் இரா.குணசீலன் பகுதியில் கண்டது.
மேலும வாசிங்க...அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
>> 30 January 2009
ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பொறுக்க முடியாமல்
தன் இன்னுயிரைத் துச்செமென நினைத்துத் தீக்குளித்து உயிர் விட்ட
தோழர் முத்துகுமாரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அண்ணாமலைப்
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்தனர்.தோழர் முத்துக்குமரனின் இறுதி ஆசை நிறைவேறுமா?
செவ்வாடையில் ஒரு சமயப்புரட்சி
>> 26 January 2009
இந்து மதத்தின் வழிபாட்டு முறைகளில்,அம்மன் வழிபாடு என்பது காலப்பழமையுடையது. இருபதாம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளிப் புதைப்பொருள்களில் மூலமாக சக்தி வழிபாடு மிகத் தொன்மையானது என்பதை அறியலாம்.ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கருவுயிருக்கும் இலச்சனை,சக்தி வழிப்பாட்டைக் குறிப்பதாக அறிஞர் கூறுவர்.சங்க இலக்கியத்தில் பாலை நில மக்கள் வணங்கிய கொற்றவை வழிபாடும் சக்தி வழிபாடுதான்.சங்க இலக்கியங்கள் கொற்றவையை ‘ஓங்கு புகழ் காமர் செல்வி’ என்றும் ‘வெற்றிவேல் போர் கொற்றவை’ என்றும் குறிப்பிடுகின்றன.அன்றைய மக்கள் கொற்றவையை வேண்டிய சக்தியைக் கொடுக்க கூடிய வெற்றி தெய்வமாகவே போற்றி வணங்கியுள்ளனர்.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சக்தி வழிபாடு காணப்பெறுகின்றன. காரைக்காலம்மையார் சிவனைப் போற்றிபாடும் பொழுது சக்தியினையும் பாடுகின்றார்.பல்லவர் காலத்தில் சக்தி வழிபாடு சைவத்துடன் இணைந்தே வளர்ந்து. சோழர் காலத்தில் இராஜராஜேஸ்வரி அம்மனையும், பாண்டியர் காலத்தில் மீனாட்சி அம்மனையும் வழிபட்டுள்ளனர்.சக்தியின் மீது ஈடுபாடு கொண்டு குமரகுருபர் சகலகலாவல்லிமாலையையும் அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியும் பாடியுள்ளனர்.
இவ்வாறு பழமைவாய்ந்த அம்மன் வழிபாட்டின் தொடர்ச்சி தான் இன்றைய மேல்மருவத்தூர் அன்னை அதிபராசக்தி வழிபாடு.1941-ஆம் ஆண்டு சென்னை யிலிருந்து 96 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேல்மருதூரில் திருவாளர் கோபால நாயகருக்கும்,திருவாட்டி மீனாம்பாள் அன்னைக்கும் அவதரித்தார் பங்காரு அடிகள். சாதரண கிராமமாக இருந்த மேல்மருவத்தூரை,அன்னை ஆதிபராசக்தியின் அருளால் பக்தித் திருத்தலமாக உருவாக்கினார் அடிகளார். அவ்வூரின் கண் அன்னை ஆதிபராசக்தி அடிகளார் உருவிலே ஆன்மீக குருவாக உலகம் நலமுடன் வாழ அருள்பாலித்து வருகிறாள்.
ஆதிபராசக்தி இயக்கமானது ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி, மாபெரும் இயக்கமாக வளர்ந்து ,உலகெங்கும் 4500 வார வழிபாட்டு மன்றங்களைக் கொண்டு,ஆன்மீக வழி நின்று அறச்சேவை செய்யும் சமுதாய சேவை கூடங்களக ஒளிர்கின்றது.
கோயில்களைச் தூய்மையாகவும் வைத்திருக்க முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கக் கூடியது அன்னை ஆதிபராசக்தி பீடம். அங்கு செல்லக்கூடிய செவ்வாடை அணிந்த ஒவ்வொரு ஆணும்,பெண்ணனும் ஊழியர்களாக மாறி தங்கள் இல்லம் போல் தூய்மை பேணுவதையும் அங்கு காணலாம்.நாம் காணக்கூடிய பிற கோயில்களில்,அக் கோயில்களில் ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்கள் பக்தர்களை எரிச்சலுடனும்,கடுமையானச் சொற்களாலும் சாடுவதைக் காணலாம்.ஆனால் மேல் மருவத்தூரில் அங்குள்ள செவ்வாடை ஊழியர்கள் மிக மரியாதையுடனும், கண்ணியத்துடனும் பக்தர்களிடம் நடந்துக்கொள்வதைக் காணலாம்.
தமிழ் நாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும்,தமிழிலேயே வழிபாடு நடத்த வேண்டுமென எத்தனை எத்தனையோ போராட்டங்கள். நடைபெற்றது,ஆனால் தமிழக கோவில்களில் தமிழ் ‘வழிபாட்டு மொழியாக’ இல்லை,மக்களுக்குப் புரியாத மொழிதான் வழிபாட்டு மொழியாக இருக்கும் நிலை.ஆனால் மேல்மருவத்தூர் சக்தி பீடம் பெரும் புரட்சியே செய்து வருகின்றது.அங்கு மக்களுக்குப் புரிந்த இனிய தேஞ்சுவை தமிழ் மொழிதான் வழிபாட்டு மொழியாக விளங்குகின்றது.அங்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊரிலுள்ள சக்தி பீடங்களிலும் இம்முறையே கடைப்பிடிக்கப்பெறுகின்றது.
மற்ற கோயில்களில் காணமுடியாத அதிசயத்தை இங்கு காணலாம்.வேதங்களாலும் ஆகமங்களாலும் பெண்களுக்கு விதிக்கப் பட்ட சட்டங்கள் எதுவும் இங்கு கிடையாது. பெண்கள் கருவறை வரை செல்லலாம்,ஆதி பராசக்தியைத் தொட்டு வணங்கலாம்,பூசையும் செய்யலாம்.பெண்கள் விலக்கு நாள்களில் கூட உள்ளே சென்று அம்மனை வழிபடலாம்.பெண்களின் சுதந்திரமான ஆன்மீகத்தேடலுக்கு வழிவகுக்கின்றது மேல்மருவத்தூர் சக்தி பீடம்.
இப்பீடம் யாவரும் மனிதரே யாவரும் பக்தரே என்ற அடியினை நடைமுறை படுத்தும் இடமாக விளங்குகின்றது. சாதி,இனம்,மதம் பாகுபாடின்றி யாவரும் இங்கு வருகின்றனர் அன்னையின் திருவருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
அன்னை ஆதிபராசக்தியின் அருத் தலமாக மட்டுமல்லாமல் மருத்துவம் மற்றும் கல்வி மையமாகவும் திகழ்கின்றது.அங்கு அமைந்துள்ள ஆலயம்,பள்ளி, கல்லூரி,200 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை ஆகியவை மேல்மருவத்தூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுதும் உள்ள மக்களுக்கும் பயன்படுகின்றன.
மேல்மருவத்தூர் தூய்மைக்குச் சான்றாகவும்,பெண்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாத ஆன்மீக வழிபாட்டு மையமாகவும்,தாய்மொழி தமிழ் மொழியில் வழிபாடு முறையையும்,சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒரு குலம் எனக் கருதும் தன்மையையும் கொண்டு திகழ்வதைக் நோக்கும் போது செவ்வாடையில் ஒரு சமயப் புரட்சி நடைபெறுவதை அறியலாம்.
குடியரசுத் தின வாழ்த்துக்கள்
இணைய நண்பர்கள் அனைவருக்கும் குடியரசுத் தின வாழ்த்துக்கள்.
மேலும வாசிங்க...பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம்
>> 25 January 2009
பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம் பார்வை சரியாக இருந்தால் என்பர் புலவர் இரா.இளங்குமரனார்.ஆம் நம்மை சுற்றி ,நாம் காணும் இடங்கள் அனைந்துமே நமக்கு ஏதோ ஒரு வகையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அண்மையில் தஞ்சைக்கு அருகில் உள்ள ஒக்கநாடு கீழையூர் என்னும் ஊரில் 80 வயது மதிக்கதக்க
பெண்மணியைச் சந்தித்தேன்.அவர் 1920 இல் பர்மாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தவர்.அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு 8ஆம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்ந்தார்கள்.அவர்களிடம் பல செய்திகளை அறிந்து கொண்டேன்.பள்ளிக்குப் போனப் பின்னும் உணவு இடைவெளியின் போதும் ,மாலை வீடி திரும்பும் பொழுதும்,ஆசிரியர்களை எவ்வாறு வணங்கி விடைபெறுவார்கள் என்பதைக் கூறினார்கள்.இந்த வயதிலும் அவர்கள் படித்த
குமரேச வெண்பா ,நீதி நெறிகள்,கம்பராமாயணம் போன்றவற்றை நினைவி நிறுத்தி நன்கு கூறுகின்றார்கள்.அதற்கு அவர்கள் கூறும் காரணம் சிறுவயது முதற்கொண்டே பாடங்களை நன்கு மனனம் செய்ததே என்கிறார்.உரு போடாத மனம் உருப்படாது என்பார்கள் அது உண்மை தான் .ஆனால் இன்று மனனம் செய்வதே குறைந்து வருகிறது.
காலை வந்தவுடன்
காலையில் எழுந்திருந்து
கால்கை சுத்தம் செய்து
கோலமா நீர்கள் பூசி
குழந்தைகள் பசிகள் ஆற
பாடமும் படிக்க வந்தோம்
படியடி வாங்கி வந்தோம்
சீழனே அனுப்புமையா
திருவடி சரணம் தானே
உணவு இடைவெளிக்குச் செல்லும் முன்
சட்டம் சிரவே தானெழுதி
சரியா லக்கம் தொகை கூட்டி
இட்ட கணக்கும் வாசகமும்
எல்லா கணக்கும் தெரிந்து கொண்டோம்
பட்ட பகலே அடிதிரும்பி
பசியால் நாங்கள் வருந்துகிறோம்
திட்டம் பார்த்து அனுப்புமையா
திருவடி சரணம் தானே.
மாலை வீடு திரும்பும் முன்
அந்திக்குப் போறோம் நாங்கள்
அகத்தினில் விளையாடாமல்
சிந்தையாய் விளக்கு முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்த்து வராத்து எல்லாம்
வகையுடன் படித்துக் கட்டி
தொண்டமான் கோழி கூவ
கூப்பிட வாரோமையா
திருவடி சரணம் தானே.
ஆசிரியப்பணி
ஆசிரியப்பணி என்பது மிகப் புனிதமான பணி.அங்கு நமது விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.ஒவ்வொரு மாணவர்களுமே நம்முடைய குழந்தையைப் போல நடத்த வேண்டுமே ஒழி,பிடித்த மாணவர்களிடம் ஒரு மாதிரியாகவும் பிடிக்காதவர்களிடம் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்வது ஆசிரியர் பணிக்குச் சிறப்பில்லை.எனக்கு தெரிந்த ஒரு மாணவி.அவள் நன்கு படிக்க கூடியவள்.எல்லா ஆசிரியர்களிடமு நல்ல பெயரும் வாங்கியிருந்தாள்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆசிரியர் ஒருவர் மட்டும்,அவளுடைய பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கிலே செயல்பட்டு,மற்ற ஆசிரியர்களிடம் இல்லாததை சொல்லி அவள் மேல் மற்றவர்களும் வெறுப்புக் கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்.இத்தகைய செயல் ஆசிரியர் தொழிலுக்கு நன்றா?தன்னுடைய மாணவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் அவர்களைத் தனியே அழைத்துத் திருத்துவது தானே ஆசிரியர் கடன்.இதனை ஏனோ அவர் மறந்தார்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரு சிறந்த முன் மாதிரியாக இருக்க வேண்டும்
வகுப்பு புறக்கணிப்பு
>> 21 January 2009
இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் போரினை நிறுத்தக் கோரி தங்களது வகுப்புக்களைப் புறக்கணித்தனர்.
மேலும வாசிங்க...








